ஹைதராபாத் ஸ்பெஷல் ஆனியன் சோட்டா சமோசா

Loading...
Description:

sl3878

நன்றி குங்குமம் தோழி

தியேட்டர்களில் கோக்கும் பெப்சியும் பாப்கார்ன் மெஷினும் காபி மேக்கரும் நுழையாத காலம். இடைவேளை வரும் முன்பே கதவு அருகே அவர்கள் கொண்டுவந்து வைக்கும் தின்பண்டங்களின் வாசனை மூக்கைத் துளைக்கும். சூடான போண்டா, பப்ஸ்,
வெங்காய சமோசா…

வெங்காய சமோசா – ஆசியாவின் பிரபல சிற்றுண்டியான இதற்கு, 1300 ஆண்டுகளுக்கு முன்பே அரச குடும்பங்களில் பரிமாறப்பட்ட வரலாறு உண்டு. ஆசியக்கண்டம் முழுதும் பலவித வடிவங்களில் பரவியுள்ளது. பெரும்பாலும் இஸ்லாமிய பயணிகளால் பயணத்தின் போது எடுத்து செல்லப்பட்டு பரப்பப்பட்டிருக்கிறது. போர்ச்சுகல், இந்தோனேஷியா, மாலத்தீவு, பாகிஸ்தான், பர்மா , நேபாளம், பங்களாதேஷ் பகுதிகளில் சமோசா பல்வேறு வடிவங்களிலும் பெயர்களிலும் பரவியிருக்கிறது. வட இந்திய நகரங்களில் பலரது காலை உணவே சமோசாதான். காரணம்… சமோசாவில் பொதுவாக ஸ்டஃப்பிங் எனப்படும் பூரணம் உருளைக்கிழங்கு சேர்த்த மசாலாவாகவே இருக்கும். இது ஆற்றல் அளிக்கக்கூடியது ஆயிற்றே!

டெல்லியில் கரோல்பாக் வீதிகளில் பெரிய தடிமனான தோசைக்கல்லில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சமோசாக்களும் ஜிலேபிகளும் குலோப் ஜாமூன்களும் கண்ணைக் கட்டி, பசியைத் தூண்டும்.  பஞ்சாபி சமோசா என்னும் அளவில் பெரிய சமோசாக்கள் உள்ளே உருளைக்கிழங்கு, பட்டாணியுடன் காரமான மசாலா நிரப்பி, பேரீச்சை சட்னி, புதினா சட்னியுடன் பரிமாறப்படும். ஒரு சமோசாவும் ஒரு ஜிலேபி அல்லது ஜாமூனுமே மதியம் வரை பசி தாங்க வைக்கும்.

ஹைதராபாத் பிரியாணிக்கு மட்டுமல்ல… சமோசாவுக்கும் புகழ்பெற்றது. இங்கு கிடைக்கும் லுக்மி எனும் சதுர சமோசா இறைச்சி நிரப்பப்பட்டது. சார்மினாரை ஒட்டியுள்ள பகுதிகளில் பெரிய கூடைகளில் அழகிய முக்கோண வடிவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சமோசாக்களை நீங்கள் கவனித்திருக்கலாம். பஞ்சாபி சமோசாவை விட, இந்த முக்கோண சமோசா ருசியானது. சின்னச் சின்ன முக்கோணங்கள் மனதைக் கொள்ளை கொள்ளும். எத்தனை சாப்பிட்டாலும் இன்னும் சாப்பிடலாமே என்று நினைக்க வைக்கும் சிற்றுண்டிகளில் இதுவும் ஒன்று.

செய்வது மிக எளிது.  ஒரு முறை செய்து காற்று புகாத கவரில் போட்டு ஃப்ரீசரில் வைத்தால் வாரக்கணக்கில் கெடாது. மேல்மாவு மட்டும் தயார் செய்து, பாதி சமைத்து, ஜிப் லாக் கவரில் போட்டு வைத்து தேவைப்படும் போதும் செய்யலாம். மைதா, கோதுமை மாவு சேர்த்து பூரணமாக வெங்காயம் வைத்து முக்கோண வடிவில் எண்ணெயில் பொரித்து எடுப்பதுதான் ஹைதராபாத் ஆனியன் சோட்டா சமோசா எனப்படும் இந்த புகழ்பெற்ற உணவு. எதுவானாலும் எண்ணெயில் இரு முறை பொரித்தெடுத்தால் சுவையும் மொறுமொறுப்பும் வண்ணமும் கூடும். இந்த சமோசாவையும் நாம் இரு முறை பொரிக்க போகிறோம்.
என்னென்ன தேவை?

மேல் மாவுக்கு…

கோதுமை மாவு – ஒரு கப்
மைதா மாவு – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – ஒரு சிட்டிகை
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

ஸ்டஃப்பிங் செய்ய…

பெரிய வெங்காயம் – 6 (மிகப்பொடி    யாக நறுக்கியது)
எலுமிச்சைப்பழ ஜூஸ் – ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாதூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை- பொடியாக நறுக்கியது
அவல் – 2 டேபிள்ஸ்பூன்.

ஒட்டும் பசை செய்ய…

மைதா –  2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

மைதா, கோதுமை மாவுகளை சலித்து,  உப்பும் சர்க்கரையும் சேர்த்து, பூரி  மாவை விட சிறிது கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் வைக்கவும். ஸ்டஃப்பிங் செய்ய தேவையான வெங்காயம் உள்ளிட்டவற்றோடு, அவல் சேர்த்து பச்சையாகக் கலந்து வைக்கவும்.   மைதா மாவை சிறிது தண்ணீர் விட்டு பசை போல  கலந்து வைக்கவும். சப்பாத்தி மாவை சிறு எலுமிச்சைப்பழ அளவு எடுத்து மெல்லிய சப்பாத்தியாக இடவும். அனைத்து சப்பாத்திகளையும் மிக லேசாக இருபுறமும் சூடு பண்ணி எடுக்கவும். வேக வைக்கக் கூடாது.

ஒரு சப்பாத்தியை இரண்டாக வெட்டி முனையை சுற்றிலும் மைதா பேஸ்ட் தடவவும். அதை ஒரு முனையில் இருந்து சுற்றினால் முக்கோண வடிவம் வரும். உள்ளே வெங்காய மசாலாவை வைத்து மைதா பேஸ்ட் தடவி மடிக்கவும்.  எல்லா சமோசாவும் தயார் செய்த பிறகு எண்ணெய் காய வைத்து பொரித்து எடுக்கவும். லேசாக வெந்ததும் எடுத்து விடவும். அனைத்து சமோசாக்களையும் ஒரு முறை பொரித்ததும், 5 நிமிடம் கழித்து மீண்டும் ஒரு முறை பொரித்து எடுத்துப் பரிமாறவும்.

உங்கள் கவனத்துக்கு…

எண்ணெய் அதிக சூடாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் சமோசா கருகி விடும், உள்ளே இருக்கும் வெங்காயம் வதங்காது.

உள்ளே வைக்கும் வெங்காயத்தை வதக்கத் தேவையில்லை. எண்ணெயில் பொரிப்பதால் பச்சையாக போட்டால்தான் பதம் சரியாக இருக்கும்.

வெங்காயத்துடன் உப்பு சேர்ப்பதால் வெளிவரும் தண்ணீரை உறிஞ்சவே அவல் சேர்க்கிறோம். அவல் சேர்க்காவிட்டால், ஸ்டஃப்பிங் வைத்து பொரிக்க நேரமானால் ருசி மாறிவிடும்.

சப்பாத்திகளை லேசாக சூடு செய்வதால், ஒன்றோடு ஒன்று ஒட்டாது. எளிதில் மடிக்க வரும்.

ஸ்டஃப்பிங் செய்ய உருளைக்கிழங்கு, கேரட், கோஸ், பட்டாணி  என எது வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.

 

Post a Comment