ஹார்மோன் அளவினை சமநிலையில் பேண உதவும் ஆசனங்கள் – tamil Yoga

Loading...
Description:

24a-Head-to-Knee-Pose-Janushirasana

ஹார்மோன் அளவினை சமநிலையில் பேண உதவும் ஆசனங்கள் – Yoga Postures For Balancing Hormones

ஹார்மோன் அளவினை சமநிலையில் பேண உதவும் ஆசனங்கள் –  
Yoga Postures For Balancing Hormones
உங்களுடைய ஹார்மோன் அளவினை சமநிலையில் பேணவேண்டுமென்று விரும்புகிறீர்களா? அதற்கேற்ற யோகாசனங்களைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இதற்கென ஏராளமான ஆசனங்கள் உள்ளன. இந்த ஆசனங்களை ஆண்களும் பெண்களும் செய்து பயன் பெறமுடியும். இருப்பினும் சமீபத்தில் குழந்தை பெற்ற தாய்மார்கள் இந்த ஆசனங்களை செய்து பிரசவத்திற்குப்பிந்தைய மனத்தளர்ச்சிக்கான அறிகுறிகளிலிருந்து விடுபடமுடியும்.
நமது உடல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது எண்டோக்ரைன் மண்டலம் எனப்படும் நாளமில்லாச் சுரப்பி மண்டலம். இந்த சிக்கலான சுரப்பிகள் அமைந்த கட்டமைப்பானது, நமது உடலில் உள்ள இதர மண்டலங்களுக்கு அனைத்து கட்டளைகளையும் பிறப்பிக்கிறது. நமது உடல் வளர்ச்சி முதல் ஒரு மனிதன் தனது உற்சாகத்தை அளவிடுவது வரை அனைத்தையும் கட்டுப்படுத்துவது இந்த சுரப்பிகளே.
ஹார்மோன்கள் என்பவை நமது உடலிலுள்ள சுரப்பிகளும் அங்கங்களும் சுரந்து, இதர உறுப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் குறிப்பிட்டவகையான வேதிப்பொருள்கள் ஆகும். இச்செயல்களை நமது உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பி மண்டலம் கட்டுப்படுத்துகிறது.
நமது உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகள் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகளைத்தூண்டி, நமது உடலில் சீரான ஹார்மோன் உற்பத்தியை உறுதி செய்து, அவற்றின் அளவினைக் கட்டுப்படுத்தி சமநிலையில் பேணுவதற்கும் பகிர்ந்தளிக்கவும், சில வகையான யோகாசனங்கள் உதவுவதாக சிலர் நம்புகின்றனர்.
ஹார்மோன் அளவினை சமநிலையில் பேண உதவும் ஆசனங்கள்!!!
நமது உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகள் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகளைத்தூண்டி, நமது உடலில் சீரான ஹார்மோன் உற்பத்தியை உறுதி செய்து, அவற்றின் அளவினைக் கட்டுப்படுத்தி சமநிலையில் பேணுவதற்கும் பகிர்ந்தளிக்கவும், சில வகையான யோகாசனங்கள் உதவுவதாக சிலர் நம்புகின்றனர்.
உடலில் ஹார்மோன் அளவினை சமநிலையில் பேண உதவும் சில ஆசனங்கள்:
சசாங்காசனம் (Sasangasana) 
—————————————————
இந்த ஆசனமானது தைராய்டு மற்றும் பாராதைராய்டுகளைத் தூண்டுகிறது. மனத்தளர்ச்சியிலிருந்து விடுபடவும் இது உதவுகிறது.
– முதலில் முழந்தாளிட்டு அமர்ந்து கொள்க.
– உங்கள் குதிகாலின் மீது உங்கள் பின்புறம் அமரட்டும்.
– உங்கள் முழங்காலிலிருந்து பாதம் வரை தரையில் ஒட்டியிருக்க வேண்டும்.
– உங்கள் கைகளிரண்டையும் பின்புறமாகக் கொண்டு சென்று உங்கள் இரண்டு பாதங்களின் கீழ்ப்பகுதியைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
– உங்கள் முகத்தைக் கவிழ்த்து முகவாய்க்கட்டையை உங்கள் நெஞ்சில் பதித்துக்கொள்ளுங்கள்.
– உங்கள் இடுப்பை வளைத்து உங்கள் நெற்றி உங்கள் முழங்காலைத் தொடுமளவுக்குக் குனியுங்கள்.
– பிறகு உங்கள் நெற்றியைத் தரையை நோக்கித்தாழ்த்தித் தரையைத்தொடுங்கள்.
– அதேசமயம் உங்கள் இடுப்பை மேல் நோக்கி உயர்த்துங்கள்.
– மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியே விடுங்கள்.
– சில நிமிடங்கள் இதே நிலையில் இருங்கள்.
ஜனுசிராசனம் (Janursirasana)
—————————————————-
பஸ்சிமோத்தாசனத்துடன் இணைக்கப்பட்டு செய்யப்படும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவினை சமப்படுத்துகிறது. தைமஸ், தைராய்டு, சிறுநீரகங்கள், கணையம் ஆகியவற்றைத் தூண்டுகிறது.
– மலை நிலையில் தொடங்குங்கள்.
– உங்கள் வலது முழங்காலை உயர்த்தி, உங்கள் இரண்டு கைகளால் பிடித்துக் கொள்ளுங்கள்.
– மூச்சை நன்றாக உள்ளிழுங்கள்.
– பின்பு வெளியேவிடுங்கள்.
– அடுத்து மூச்சை உள்ளிழுக்கும்போது, உங்கள் கைகளைக் கீழே கொண்டு சென்று, உங்கள் வலதுகால் பாதத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
– பின் மூச்சை வெளியில் விடுங்கள்.
– வலது காலை முன் நோக்கி உதையுங்கள்.
– உங்கள் வலது காலை 90 டிகிரி கோணத்தில் பிடித்துக்கொள்ளுங்கள்.
– உங்கள் தலையை உங்கள் வலது முழங்காலை நோக்கித் தாழ்த்துங்கள்.
– அதே நேரத்தில்,உங்கள் முழங்கைகளை பக்கவாட்டில் கீழே இறக்குங்கள்.
– இதே நிலையில் இருந்துகொண்டு இரண்டுமுறை மூச்சை நன்றாக உள்ளிழுத்து பின் வெளியே விடுஙள்.
– பிறகு இதே முறையை அடுத்த காலுக்கு மாற்றி செய்யுங்கள். முதன்முறையாகச் செய்பவர்கள், முழங்காலைத் தங்களது உடலுடன் ஒட்டியிருக்குமாறு வைத்துக் கொண்டு செய்தால் எளிதாக இருக்கும். அல்லது பின்வரும் முறையில் பஸ்சிமோத்தாசனம் மட்டும் செய்யலாம்.
பஸ்சிமோத்தாசனம் (Paschimottanasana) 
———————————————————————–
– நேராக நின்று கொள்ளுங்கள்.
– பாதங்களைத் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள்.
– இடுப்பிலிருந்து முன்பக்கமாகக் குனியுங்கள்.
– உங்களிரண்டு கைகளையும் கால்களுக்கு இணையாகக் கீழே தொங்கவிடுங்கள்.
– உங்கள் முதுகு வளையாமல் தட்டையாக இருக்கட்டும்.
– உங்கள் கைகள், உங்கள் கால்களுக்கு இணையாக இருக்குமாறு பார்த்துக் கொண்டு ஐந்து முறை மூச்சினை நன்றாக உள்ளிழுத்து வெளியில் விடுங்கள்.
– பிறகு மெதுவாக முதல் நிலைக்குத் திரும்புங்கள்.
சுகாசனம் (Sukhasana)
—————————————
மெதுவான கட்டுப்படுத்தப்பட்ட சுவாசம் உங்களது ஹார்மோன் செயல்பாடுகளை சரிப்படுத்துகிறது. அட்ரீனல் சுரப்பியை அமைதிப்படுத்துகிறது. பதட்டத்தைக் குறைக்கிறது. மேலும் குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனத்தளர்ச்சியைக் குறைக்க உதவுகிறது.
– இரண்டு அங்குலம் அளவுக்குக் குறையாத உயரத்திற்கு மடித்து தரையில் விரிக்கப்பட்டுள்ள விரிப்பின் மீது அமர்ந்து கொள்ளுங்கள்.
– சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளுங்கள்.
– உங்கள் கைகளை உங்கள் தொடைகள் மீது வைத்துக் கொள்ளுங்கள்.
– உள்ளங்கைகள் மேல் நோக்கி இருக்கட்டும். – நன்றாக நிமிர்ந்து உட்காருங்கள். ஆனால் இடுப்பு தளர்வாகவே இருக்கட்டும்.
– உங்களது மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே உங்கள் முகவாய்க்கட்டையையும், முதுகுத்தண்டையும் முன்னோக்கி நகர்த்துங்கள்.
– அதேநேரம் மூச்சை நன்றாக விரைவாக வெளிவிடுங்கள். முதுகை முன்னோக்கி வளையுங்கள்.
– இதே முறையை திரும்பத் திரும்ப செய்யுங்கள். மூச்சினை உள்ளிழுத்து வெளிவிடும் நேரத்தை 30 வினாடிகள் என்று சீராகப் பேணுங்கள்.
முத்திரைகள் (Mudras)
—————————————
இம்முத்திரைகள் பிட்யூட்டரி மற்றும் பீனியல் சுரப்பிகளைத் தூண்ட உதவும்.
– உங்கள் உள்ளங்கைகள் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து பிரணாம் முத்திரைக்குக் கொண்டு வாருங்கள். உங்கள் கை கட்டை விரல்கள் இரண்டும் உங்கள் நெஞ்சினைத்தொடும் அளவில் இருக்கவேண்டும். இப்போது உங்கள் கட்டைவிரல்களை வலது பக்கம், கீழே, இடதுபக்கம், மேலே என்று சுழற்றுங்கள். இதே முறையைத்திரும்ப செய்யுங்கள்.
– அடுத்து உங்கள் கைகளைத் திறங்கள். உங்கள் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் ஞான முத்திரையில் இருப்பது போல சேர்த்து வையுங்கள். இப்போது விரல் நுனிகள் இரண்டையும் சேர்த்து அழுத்துங்கள்.
– அடுத்து நடுவிரலையும் கட்டை விரலையும் சேர்த்து அழுத்துங்கள்.
– அடுத்து மோதிரவிரலையும் கட்டை விரலையும் சேர்த்து அழுத்துங்கள்.
– அடுத்து சுண்டு விரலையும் கட்டை விரலையும் சேர்த்து அழுத்துங்கள்.
– மீண்டும் ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் சேர்த்து அழுத்துங்கள்.
– இச்செயல்களை உங்கள் சுவாசத்துடன் இணைத்து ஒரே சீராகச் செய்துவாருங்கள். இப்பயிற்சியை ஒவ்வொரு சுற்றினையும் இரண்டு நிமிடங்கள் செய்யலாம்.

Post a Comment