வெயிலே வெயிலே ஓடிப்போ!

Loading...
Description:

வெயிலே வெயிலே ஓடிப்போ!மழை ஒழுங்கா பெய்யுறதில்ல, ஆனா வெயில் மட்டும் வெளுத்து வாங்குது. பருவ காலங்கள் முன்ன மாதிரி இல்லை, ஏறுக்கு மாறா… ஏட்டிக்கு போட்டியா போய்க்கிட்டு இருக்கு. சரி விஷயத்துக்கு வருவோம். வெயில் இப்பவே வறுத்தெடுக்கத் தொடங்கிட்டு. ஏற்கனவே வெயில் காலங்கள்ல அம்மை, வேர்க்குரு, கொப்புளம், வயித்துக்கடுப்பு, வயித்துவலினு வந்து பாடாப்படுத்தும். ஆனா இப்போ புதுசு புதுசா… தினுசு தினுசா நோய்கள் வந்து மனுசன ஒருவழி பண்ணிட்டு போயிருது. அறிவியல் என்னதான் வளர்ச்சி அடைஞ்சாலும் இந்த நோய்களை கண்டுபிடிக்க முடியலை. இந்த நோய்கள் வர்றதுக்கு ரெண்டே காரணந்தான். ஒண்ணு உடல் உழைப்பு குறைஞ்சு போனது, ரெண்டாவது நாம சாப்பிடுற சாப்பாடு.

சரி நேரடியா விஷயத்துக்கு வருவோமா?…

வறுத்தெடுக்கும் கோடை வெயில்ல இருந்து நம்மளை காத்துக்கிடணும்னா கீழே சொல்லப்பட்டிருக்கிறதல சிலதை மட்டும் பின்பற்றினாலே போதும், கைமேல் பலன்.
கோடை வர்றதுக்கு முன்பே தர்பூசணி விற்பனைக்கு வந்துட்டு. விலை குறைவா உள்ள இந்த தர்பூசணியை சாப்பிட்டா உடம்புக்கு குளிர்ச்சி கிடைக்கிறதோட தாகம் தணியும். என்ன ஒண்ணு அடிக்கடி சிறுநீர் போகும், அவ்வளவுதான். அதேபோல எல்லா காலத்துலயும் தாராளமா கிடைக்கக்கூடிய இளநீரை குடிக்கலாம். இதுவும் சூட்டை தணிக்கும். ஆனா என்ன… விலைதான் விர்ருன்னு தென்னைமரம் மாதிரி ஏறிப்போச்சு.

இளநீர் குடிக்கிறதுல தப்பில்லை, கடைக்குப்போனா எளநி வியாபாரி, ‘வழுக்கையா, தண்ணியா’ன்னு கேப்பாரு. சிலபேரு வழுக்கையா பாத்து போடுங்கன்னு வாங்கி ‘மடக் மடக்’குனு குடிப்போம். லேசான வழுக்கை ருசியாத்தான் இருக்கும். ஆனா இப்பிடி தொடர்ந்து வழுக்கையா வாங்கி சாப்பிட்டா காலப்போக்குல அது பசியைக்குறைச்சி குன்மம்னு சொல்லக்கூடிய வயித்து நோய் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால எப்பவுமே புதுசா பறிச்ச இளநீரை வாங்கி குடிச்சா உடம்புக்கு நல்லது, அதாவது வெறும் தண்ணியா உள்ள இளநீரா பார்த்து வாங்கி குடிங்க. கூல் கூல்..!

வெயில் காலத்துல வீட்டுக்கு வீடு மண்பானையில தண்ணி ஊத்தி வச்சி குடிப்போம், நல்லதுதான். சும்மா வெறுமனே தண்ணியை ஊத்தாம காய்ச்சி ஆற வச்ச தண்ணியை மண்பானையில ஊத்தி வச்சி குடிக்கலாம். தண்ணியை ஊத்துறதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம். தண்ணி கொதிக்கும்போது கொஞ்சம் சீரகத்தை அள்ளிப்போடுங்க. உடம்புக்கு குளிர்ச்சி தர்றதோட உள்உறுப்புகள் சரியாகும். மண்பானையில வெட்டிவேரை ஊறப்போட்டு குடிச்சாலும் உடம்புக்கு குளிர்ச்சி கிடைக்கும். இது நாட்டு மருந்துக்கடைகள்ல கிடைக்கும். ஜன்னல் ஓரங்கள்ல வெட்டிவேர்ல செஞ்ச தட்டியை பயன்படுத்தினா குளிர்ச்சியான காத்து கிடைக்குறதோட நல்ல வாசமா இருக்கும்.

வெட்டிவேர் மாதிரியே நன்னாரி வேரும் நல்ல குளிர்ச்சி தரக்கூடியது. இதை வாங்கி இடிச்சி தண்ணியில போட்டு கொதிக்க வச்சி சூடு ஆறுன உடனே சீனி (சர்க்கரை) சேர்த்து குடிச்சா ஒண்ணுக்கு போகும்போது வரக்கூடிய எரிச்சல் சரியாகும். கடைகள்ல விற்கக்கூடிய நன்னாரி சர்பத் குடிக்க டேஸ்டா இருக்கலாம், ஆனா சுகம் கிடைக்காது. இது எந்தவித கலப்பு இல்லாத சூப்பர் சர்பத்.

கோடை காலத்துல புழுக்கம் வர்றது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சிலபேருக்கு எரிச்சல், கோபம், படபடப்பு, குழப்பம் வரும். சிலபேருக்கு தலைசுத்தலும், மயக்கமும் வரும். இந்த மாதிரி பிரச்னை வந்தா செம்பருத்திப்பூ சர்பத் குடிச்சா நல்லது. அதென்ன செம்பருத்தி பூ சர்பத்துன்னு கேக்குறீங்களா? எங்க ஊர்ப்பக்கம் தடியங்காய்னு சொல்வாங்க, அதோட பேரு கல்யாணபூசணிக்காய். திருஷ்டிக்கு உடைப்பாங்களே, அதே காய்தான். அதுல ஒரு ஓட்டை போட்டு 50 இல்லைனா 100 செம்பருத்திபூவை உள்ள திணிச்சி மூடி வச்சிரணும். மறுநாள் அதை உடைச்சி சதை பகுதியை எடுத்து சாறு பிழிஞ்சி சம அளவு சீனி (சர்க்கரை) சேர்த்து தேன் பதத்துல காய்ச்சி ஆற வச்சா செம்பருத்தி பூ சர்பத் ரெடி. இதுல  4 ஸ்பூன் சர்பத் 4 ஸ்பூன் தண்ணி சேர்த்து குடிச்சா படபடப்புல தொடங்கி ஆயாசம், கண் எரிச்சல்னு எல்லாம் ஓடிப்போயிரும்.

இதுபோக வெயில் காலத்துல கிடைக்கக்கூடிய நொங்கு (பனைநுங்கு), எலுமிச்சை ஜூஸ் சாப்பிடறதால பிரச்னைகள்ல இருந்து தப்பிக்கலாம். எலுமிச்சை ஜூஸை தண்ணி, சீனி சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து குடிங்க. அதிகமா புளிப்பு இருந்தா அமிலம் இருக்குன்னு  அர்த்தம். அது உடம்புக்கு அவ்வளவு நல்லதில்லை. மத்தபடி வெள்ளரிப்பிஞ்சு, வெள்ளரிப்பழம், பானகம் குடிக்கலாம். பானகம் எப்பிடி செய்யுறதுன்னு சிலபேருக்கு  தெரியாது.

புளியை தண்ணியில ஊறப்போடுங்க. ஊறின தண்ணியோட கொஞ்சம் கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து கரைச்சி குடியுங்க. வயித்துக்கடுப்பு, சொட்டு மூத்திரம்னு அது தொடர்பான எல்லா கோளாறுகளும் சரியாயிரும். சூடும் தணியும். அந்த காலத்துல சனிக்கிழமையானா எண்ணெய் தேய்ச்சி குளிப்பாங்க. இப்போ அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்குன்னு சொல்லி சமாளிக்கிறாங்க. உச்சந்தலையில இருந்து உள்ளங்கால் வரை குளிரக்குளிர நல்லெண்ணெய் தேய்ச்சிட்டு ஒரு மணி நேரம் கழிச்சி குளிச்சி பாருங்க, அப்பிடியே சொர்க்க லோகம் தெரியும்.

Post a Comment