வடகறி,samayal

Loading...
Description:


இந்த வடகறி மசாலா கலவையை இட்லி, தோசை, சப்பாத்தி, வெண்பொங்கல் உடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும்.

இந்த வடகறி சென்னையின் மற்றுமொரு அடையாளம். ஓட்டல் சரவணபவன், ரத்னா கேப், ஓட்டல் சங்கீதா போன்ற உணவகங்களில் இட்லி வடகறி மற்றும் இடியாப்ப வடகறி என்று நமது மக்கள் கேட்டு வாங்கி சாப்பிடுவதை நம்மால் பார்க்க முடியும். என்னுடைய பணிவான வேண்டுகோல் தயவுசெய்து கோவையில் சில பிரபலமான உணவகங்களில் கிடைக்கும் வடகறி உண்மையான வடகறியே அல்ல !!!!

திருப்பத்தூர் வடமலை பவன் வடகறியே இது. ( வேலூர் மாவட்டம் )

இது எனக்கு மிகவும் பிடித்தமான சைட்டிஷ் !!!!

தேவையான பொருட்கள்

வேகவைத்த பச்சை பட்டாணி 1 கைப்பிடி
கொத்தமல்லி இலைகள் 1/2 கைப்பிடி
மரச்செக்கு சுட்ட கடலெண்ணய் 1 மேஜைக்கரண்டி

வடைக்கு அரைக்க
கடலைப்பருப்பு 1/2 கப்
வர மிளகாய் 4
மஞ்சள்தூள் 1 சிட்டிகை
சின்ன வெங்காயம் 15 ( பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி 1/2 கைப்பிடி
பூண்டு பற்கள் 3
உப்பு தேவையான அளவு
மரசெக்கு கடலெண்ணய் ( பொறிப்பதற்கு தேவையான அளவு)

மசாலா தாளிக்க
மரசெக்கு சுட்ட கடலெண்ணய் 4 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் 3/4 கப் ( பொடியாக நறுக்கியது)
கறிவேப்பில்ல 1 கைப்பிடி
தக்காளி 1 கப் ( பொடியாக நறுக்கியது)
மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் 2 தேக்கரண்டி
தேங்காய் பால் 1 1/4 கப்

மசாலா அரைக்க
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி
பச்சை மிளகாய் 4 ( பொடியாக நறுக்கியது)
சோம்பு 1/2 தேக்கரண்டி
மிளகு 1/2 தேக்கரண்டி
பட்டை 1 இன்ச்
தேங்காய் பால் 2 மேஜைக்கரண்டி
இலவங்கம் 4
அண்ணாச்சி மொக்கு 1
பிரியாணி இலை 1

செய்முறை

1. முதலில் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக ஒரு துளிகூட தண்ணீர் விடாமல் நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

2. கடலைப்பருப்பை தண்ணீர் விட்டு இரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

3. அதன் பிறகு வடைக்கு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

4. அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையில் இருந்து 1 தேக்கரண்டி அரைத்து வைத்துள்ள வடை கலவைக்கு சேத்து வைக்க வேண்டும்.

5. இப்பொழுது வடச்சட்டியில் பொறிப்பதற்கு தேவையான அளவிலான மரச்செக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் , அதில் வடை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.

6. இப்பொழுது மற்றுமொரு வடச்சட்டியில் மரச்செக்கு சுட்ட கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் அதில் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

7. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும். அதில் பச்சை மிளகாயை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

8. பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்துகோங்க நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

8. அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் வரமிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

9. இப்பொழுது அதில் தேங்காய் பாலை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதில் பொடித்த அல்லது துண்டு துண்டாக பிச்சுபோட்ட வடையை தேங்காய் பால் மசாலா கலவையில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

10. இச்சமயத்துல வடை கலவை தேங்காய் பாலை தன்னுள் இழுத்து கொள்ள ஆரம்பிக்கும். பிறகு வேகவைத்த பச்சை பட்டாணியை சேர்த்து ஒரு இரண்டு நிமிடங்கள் நன்றாக கிளறவும். அச்சமயத்துல அடுப்பை சிறுதீயில் வைத்து சுற்றி மரசெக்கு சுட்ட கடலெண்ணய் ஊற்றி சுருள சுருள கிளறவும்.

11. நமக்கு ஏற்றவாறு வடகறியின் கெட்டி தன்மையை உற்று கவனித்து பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

குறிப்பு.
1. தேவையெனில் புதினா இலைகளை சேர்த்துகோங்க.

2. வடகறி கெட்டி ஆகும் சமயத்துல சிறு தண்ணீர் சேர்த்துகோங்க , என்னுடைய பணிவான வேண்டுகோல் என்னவென்றால் இரண்டாம் தேங்காய் பாலை எடுத்து வைத்து கொண்டு , இந்த சமயத்துல பயன்படுத்தி கொள்ளலாம்.

Post a Comment