ராஸ்பெரி சோர்பே ,Tamil Samayal,Tamil Recipes | Samayal in Tamil | Tamil Samayal|samayal kurippu,Tamil Cooking Videos,samayal,samayal Video,Free samayal Video

Loading...
Description:

‘சர்பத்’ என்பது பொதுவாக ஏதேனும் ஒரு பழத்தின் சுவை (flavor) அல்லது மணத்தை அடிப்படையாகக் கொண்டு இனிப்பு கலந்து தயாரிக்கப்பட்ட சிரப்பாக இருக்கும். இந்த சிரப்பைத் தண்ணீருடன் தேவையான அளவு கலந்து, ஐஸகட்டிகள் சேர்த்து குளிர்ச்சியாகப் பருகுவோம். ஆனால் சோர்பே (Sorbet) சர்பத்திலிருந்து சற்று வித்தியாசமானது. இதுவும் பழரசத்துடன் இனிப்பு சேர்த்து செய்யப்படுவதுதான் ஆனால் பிரீஸ்(Freeze) செய்து ஐஸ்கிரீம் போன்று சாப்பிடுவது.(படத்தில் பார்க்கவும்.)

இந்த சம்மரும் பண்ணை நிலத்திற்குச் (Farm visit) சென்றிருந்தோம். செர்ரி, ஆப்பிள், பீச்,பெர்ரி வகைகள் நிறைய அங்கே இருந்தது.நிகிலா இந்தமுறை ஒரு சிறிய பெட்டியில் பெர்ரி (Berry-ராஸ்பெரி [Raspberry] மற்றும் பிளாக்பெரி [Blackberry]) வகைப் பழங்களைப் பறித்துச் சேர்த்தாள். அவள் பறித்தது போக நானும் என் கணவரும் சேர்ந்து சிறிது ராஸ்பெரி பறித்திருந்தோம். மொத்தமாக மூவர் பறித்ததையும் சேர்த்துப் பார்க்கையில் ராஸ்பெரி மட்டுமே 1/2 கப்புக்கு கொஞ்சம் தாராளமாகவே இருந்தது.அதில் ராஸ்பெரி சோர்பே (Raspberry Sorbet) செய்து பிரீஸரில் வைத்தேன். அடுத்த நாள் மதிய உணவுக்குப் பின் ஆளுக்குக் கொஞ்சம் ராஸ்பெரி சோர்பே சாப்பிட்டோம். வெயில் நேரம் இந்த சோர்பே சாப்பிட மிகவும் நன்றாக இருந்தது. ராஸ்பெரி சோர்பே நீங்களும் தயாரிக்க …

            

தேவையான பொருட்கள்:

 • ராஸ்பெரி – 1/2 கப்
 • சர்க்கரை – 1/2 கப்
 • தண்ணீர் – 1 கப்

செய்முறை:

 • ராஸ்பெரியைத் தண்ணீரில் நன்றாக அலசவும்.
 • மிக்ஸி ஜாரில் ராஸ்பெரியைப் போட்டு லேசாக தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
 • கொட்டைகள் இல்லாமல் சாறை மட்டும் வடிகட்டி பிரித்தெடுக்கவும்.
 • ஒரு பாத்திரத்தில் ராஸ்பெரி பழத்தின் வடிகட்டிய சாறு,தேவையான அளவு சர்க்கரை, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
 • சர்க்கரை நன்றாக கரையும்படி, கரண்டி வைத்து கலக்கி விடவும்.
 • 2-3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்த பின் அடுப்பை அணைக்கவும்.
 • இக்கலவையை நன்றாக ஆறவிட்டு, பிரீசரில் வைக்கத் தகுந்த டப்பாவிற்கு மாற்றவும்.(Freezer food storage containers.)
 • டப்பாவை இறுக மூடி குறைந்தது 4 மணி நேரம் பிரீஸரில் (Freezer) வைத்திருக்கவும்.
 • ஐஸ்கிரீம் ஸ்கூப் (Ice cream scoop) வைத்து குவியலாக பந்து போல் உருட்டி எடுக்கவும்.(ஐஸ்கிரீம் ஸ்கூப் இல்லாத பட்சத்தில் உருண்டை வடிவிலான கரண்டி பயன்படுத்தியும் இப்படிச் செய்யலாம்.)
 • பிடித்தமான கப் (அல்லது) ஐஸ்கிரீம் பவுலில் இதை குளிர்ச்சியாகப் பரிமாறவும்.

 வெனிலா ஐஸ்கிரீமுடன் ராஸ்பெரி சோர்பே  

மாற்று முறை : (Serving suggestion/Serving idea)

வெனிலா ஐஸ்கிரீம் மீது இந்த ராஸ்பெரி சோர்பேவை வைத்துச் சாப்பிட – கலர்புல்லாகவும்,மிகுந்த சுவையுடனும் இருக்கும்.

அலங்கரிக்க:

மின்ட் (mint leaf) இலையை மேலே வைத்து அலங்கரிக்கலாம்.

 

Post a Comment