தாய்ப்பால் பெருக்கும் 15 உணவுகள்

Loading...
Description:

p61m

ரோஸ்டட் கார்லிக்

* பத்தியக் குழம்பு

* பச்சை மருந்துப் பொடி

* பால்சுறா குழம்பு

* பூண்டு கீரை பருப்பு மசியல்

* பால்சுறா புட்டு

பூண்டு பால்

* கருவாட்டுக் குழம்பு

* பூண்டு ரசம்

* முட்டை ரசம்

* மருந்துக் குழம்பு

* மட்டன் மிளகு ஈரல் வறுவல்

* கசாயம்

* வெந்தய டீ

ர்ப்பகாலம் முதல் பாலூட்டும் காலம் வரை பெண்களுக்கான சத்துணவு சமையல்கள் பற்றிச் சொல்லிவரும் தூத்துக்குடியைச் சேர்ந்த திவ்யா, இந்த இதழில் வழங்குவது பாலூட்டும் பெண்களுக்கான பிரத்யேக சமையல்கள்! இங்கே சொல்லப்பட்டிருக்கும் பொருட்கள் எல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.


ரோஸ்டட் கார்லிக்

தேவையானவை:
பூண்டு – 4
நெய் – 1 டீஸ்பூன்

செய்முறை 1:
பூண்டை உரித்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிது நெய் ஊற்றி, உரித்த பூண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வேகும்வரை வதக்கிப் பரிமாறவும். பூண்டு நன்கு வெந்துவிட்டால் லேசான இனிப்புச் சுவையுடன் இருக்கும்.

செய்முறை 2:
அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றாமல், உரிக்காத பூண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகும் வரை வறுத்து எடுத்து, பின்னர் உரித்துச் சாப்பிடவும். பூண்டின் தோல் அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும்.

குறிப்பு:
பூண்டு நன்றாக வெந்திருந்தால் மிருதுவாகவும் சுவையுடனும் இருக்கும். வேகாத பூண்டு காரமாக இருக்கும். வெந்த பூண்டுகளை தினமும் சாப்பிட்டு வர… பால் சுரப்பு நன்றாக இருக்கும்.


பத்தியக் குழம்பு

தேவையானவை:
பூண்டு – 5 பல்
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
வெல்லம் – அரை  டீஸ்பூன்
நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

மசாலா அரைக்க:
தேங்காய் – 2 சிறிய துண்டுகள்
பூண்டு – 5 பல்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
சீரகம் – அரை  டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்

செய்முறை:
புளியைக் கால் கப் தண்ணீரில் ஊறவைக்கவும். தேங்காயைச் சிறு துண்டுகளாக வெட்டி, அதனுடன் மசாலா அரைக்கக் கொடுத்துள்ள பிற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெந்தயம் தாளித்து, உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து சிறிது தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் புளிக் கரைசலைச் சேர்த்து பச்சை வாடை நீங்கும்வரை அடுப்பில் வைத்து, இடித்த வெல்லம் சேர்த்து சில நொடிகள் வைத்து பின்னர் இறக்கவும். விரும்பினால், கறிவேப்பிலையை சிறிது எண்ணெயில் தாளித்து இப்போது குழம்பில் சேர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு:
தேங்காய்க்கு பதிலாக ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பை சேர்த்தும் பத்தியக் குழம்பு செய்யலாம். இதில்,  பூண்டுடன் சுண்டைக்காய் வற்றலையும் சேர்த்து வதக்கியும் செய்யலாம்.


பச்சை மருந்துப்பொடி

தேவையானவை:
சுக்கு – 100 கிராம்
மிளகு – 25 கிராம்
திப்பிலி – 10 கிராம்
நறுக்கு மூலம் – 25 கிராம்
ஓமம் – 50 கிராம்
கருஞ்சீரகம் – 25 கிராம்
பெருங்காயம் – ஒரு புளியங்கொட்டை அளவு
கடுகு – 50 கிராம்
சீரகம் – 25 கிராம்
அக்கரா – ஒரு சிறிய துண்டு
சித்தரத்தை – ஒரு சிறிய துண்டு
சன்னயிரு – 25 கிராம்
சாலியல் – 50 கிராம்
சதகுப்பை – 50 கிராம்

செய்முறை:
சுக்கு, மிளகு, திப்பிலி, நறுக்கு மூலம், ஓமம், பெருங்காயம், அக்கரா, சித்தரத்தை, சன்னயிரு, சாலியல் மற்றும் சதகுப்பையை அம்மியில் நன்கு தட்டி பிறகு மிக்ஸியில் சேர்த்து அரைத்து பொடியாக்கி சலித்து வைத்துக் கொள்ளவும். இவையெல்லாம் சற்று கடினமாக இருக்கும் என்பதால் நன்கு தட்டிவிட்டு பிறகு மிக்ஸியில் அரைத்தால் மட்டுமே உடைந்து பொடியாகும். இல்லையென்றால், மிக்ஸியின் பிளேடு உடைந்துவிடும். இத்துடன் தேவையானவற்றில் மீதமிருப்பவைகளை சேர்த்து அரைக்கவும். இப்படி அரைத்து சலித்தெடுத்து வைப்பதுதான் பச்சை மருந்துப்பொடி. பிறகு, காற்றுப்புகாத ஒரு பாட்டிலில் போட்டு வைத்து, அவ்வப்போது கஷாயம் செய்து, பாலூட்டும் தாய்மார்களுக்குக் கொடுக்கவும்.

கஷாயம் செய்யும் விதம்:
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டீஸ்பூன் பச்சை மருந்துப் பொடி, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு, தட்டிய கருப்பட்டி சிறிது சேர்த்துக் கரைந்ததும் எடுத்து வடிகட்டி பிறகு பரிமாறவும்.

குறிப்பு:
பாலூட்டும் தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த முதல் மாதம் இதைக் குடிக்கக் கொடுக்கும்போது, கர்ப்பப்பை விரைவில்  குணமடைய உதவும். மேலும், தாய்ப்பாலின் மூலமாக இந்த மருந்தின் பலன் குழந்தையைச் சென்றடையும்; குழந்தைக்கு வயிற்று வலி, ஒவ்வாமை போன்றவை ஏற்படாமல் தவிர்க்கும்.


பால்சுறா குழம்பு

தேவையானவை:
பால் சுறா – 250 கிராம்
தேங்காய் – அரை மூடி (துருவிக்கொள்ளவும்)
புளி – ஒரு சிறிய உருண்டை (இந்த குழம்புக்கு  புளி அதிகம் தேவையில்லை)
பூண்டு – 4 பல் (தட்டிக் கொள்ளவும்)
சீரகம் – 2 டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
மல்லி (தனியா) – 2 டீஸ்பூன்
சுக்கு – ஒரு சிறிய துண்டு
(அம்மியில் வைத்துத் தட்டவும்)
காய்ந்த மிளகாய் – ஒன்று
கடுகு – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 2 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
புளியை கால் கப் தண்ணீரில் ஊறவைக்கவும். பால் சுறாவை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவிக் கொள்ளவும். பூண்டைத் தட்டிக்கொள்ளவும். தேங்காய்த் துருவலுடன் மிளகு, சீரகம், மல்லி (தனியா), தட்டிய சுக்கு, காய்ந்த மிளகாய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும். தட்டிய பூண்டைச் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர், புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாடை போகும்வரை நன்கு கொதிக்கவிடவும்.  நன்றாகக் கொதித்ததும் பால் சுறாவைச் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். அதிகம் கிளற வேண்டாம். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.


பூண்டு – கீரை – பருப்பு மசியல்

தேவையானவை:
பூண்டு – 8 பல்
பாசிப்பருப்பு – அரை கப்
பசலைக்கீரை – 2 கப்
சீரகம் – ஒரு டீஸ்பூன்

செய்முறை:
பூண்டை உரித்துக்கொள்ளவும். கீரையை கழுவி நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நறுக்கிய கீரை, பாசிப்பருப்பு, சீரகம், உரித்த பூண்டு சேர்த்து, கால் கப்  தண்ணீர் சேர்த்து நன்றாக மசியும்வரை வேகவிடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி ஒரு டேபிள்ஸ்பூன் அல்லது கரண்டியால் மசித்து சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு:
பொதுவாக பருப்பு சமையலை பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளும்போது தாய்க்கும் சேய்க்கும் வாயுத்தொல்லையை ஏற்படுத்தலாம் என்பதால், அவற்றுடன் கண்டிப்பாக பூண்டு, சீரகம் அல்லது பெருங்காயம் சேர்த்துச் சமைக்க வேண்டும். பாசிப்பருப்பு வாயுத் தொல்லை கொடுக்காது என்பதால், மற்ற பருப்புகள் தவிர்த்து பாசிப்பருப்பு சேர்க்கலாம். பிரசவ நேரத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கினால் இரும்புச்சத்து இழந்த தாய்மார்களுக்குக் கீரை சிறந்த உணவு.


பால்சுறா புட்டு

தேவையானவை:
பால் சுறா – 200 கிராம்
பூண்டு – 4 பல்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 2 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – சிறிய துண்டு
நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்

செய்முறை:
பால் சுறாவை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவிக்கொள்ளவும். இட்லி பாத்திரத்தில் மீன் துண்டுகளை வைத்து ஆவியில் வேகவைத்தெடுக்கவும் (மீனைத் தண்ணீரில் போட்டு வேகவைத்தால் குழைந்துவிடும்). நன்றாக வெந்ததும் ஆறவிட்டு உதிர்த்துக்கொள்ளவும். இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும்  கடுகு தாளித்து, சீரகம், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும். உளுத்தம்பருப்பு சிவந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டைச் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் உதிர்த்த மீன், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். குறைந்த தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து  பிறகு இறக்கி சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு:
பால் சுறா, பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பை அதிகரிக்கும். ஏற்கெனவே அதிக பால்சுரப்பு உள்ள தாய்மார்கள் இதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டாம். பால் பற்றாமல் இருக்கும் தாய்மார்கள் வாரம் இருமுறை செய்து சாப்பிட ஏற்ற உணவு இது.


பூண்டுப் பால்

தேவையானவை:
பூண்டு – 100 கிராம்
பசும்பால் – 500 மில்லி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
பூண்டை உரித்துக்கொள்ளவும். பாலை அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சி, உரித்த பூண்டு சேர்த்து நன்றாக வேகவிடவும். பூண்டு வேக சற்று நேரம் எடுக்கும். எனவே, தீயை மிதமாக்கிக்கொள்ளவும். பூண்டு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சிறிது உப்பு சேர்க்கவும். சாப்பிட சூப் போல இருக்கும் இப்பாலைப் பருகி, பூண்டுகளைச் சாப்பிடவும்.

குறிப்பு:
நன்றாக வேகவில்லை என்றால் பூண்டு காரமாக இருக்கும் என்பதால், வேகும்வரை காத்திருக்க வேண்டும். இதைப் பாலூட்டும் தாய்மார்கள் குழந்தை பிறந்த முதல் மாதத்தில் அடிக்கடி பருகி வர, பால் சுரப்பு நன்றாக இருக்கும். ஏற்கெனவே பால் சுரப்பு சீராக உள்ள தாய்மார்களுக்கு இது தேவையில்லை.


கருவாட்டுக் குழம்பு

தேவையானவை:
சீலா கருவாடு – 5 சிறிய துண்டுகள்
பூண்டு – 5 பல்
புளி – ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால்  டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

மசாலா அரைக்க:
சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்

செய்முறை:
கருவாட்டை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து கழுவி எடுத்து வைக்கவும். பூண்டை உரித்துக்கொள்ளவும். புளியை கால் கப் தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசலை சேர்த்துக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். புளித்தண்ணீரில் அரைத்த மசாலாவைச் சேர்க்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, வெந்தயம் சேர்த்து, பொரிந்ததும் உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்து வைத்திருக்கும் விழுது மற்றும் உப்பைச் சேர்த்து, தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். மஞ்சள்தூள் சேர்க்கவும். நன்றாக கொதித்ததும் பூண்டு வெந்துவிட்டதா என்று பார்த்து, பிறகு கருவாட்டைச் சேர்த்து வெந்ததும் இறக்கவும்.

குறிப்பு:
சில சீலா கருவாடுகள் சீக்கிரம் வெந்துவிடும். எனவே, கவனித்து அடுப்பிலிருந்து இறக்க வேண்டும், இல்லை என்றால் கருவாடு, குழம்பில் கரைந்துவிடும். கருவாட்டில் ஏற்கெனவே உப்பு இருக்கும் என்பதால் கருவாடு சேர்க்கும் முன்னர் உப்பு குறைவாகச் சேர்த்து, தேவைப்பட்டால் பின்னர் சேர்த்துக்கொள்ளலாம்.

சைவ உணவுக்காரர்களில், இதே குழம்பில் கருவாட்டுக்குப் பதில் மணத்தக்காளி வற்றல் சேர்த்துச் செய்யலாம். பூண்டு வதக்கும்போதே மணத்தக்காளியையும் சேர்த்து வதக்கிவிடவும்.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தாய்மார்கள் மீன் மற்றும் கருவாடு உணவுகளை முதல் 20 நாட்களுக்குத் தவிர்க்கச் சொல்வார்கள்.


பூண்டு ரசம்

தேவையானவை:
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
பூண்டு – 8 பல்
காய்ந்த மிளகாய் – ஒன்று
சீரகம் – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – அரை  டீஸ்பூன்
நெய் (அ) நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
புளியை கால் கப் தண்ணீரில் ஊறவைக்கவும். பூண்டு மற்றும் சீரகத்தை தட்டிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய்/நல்லெண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெந்தயம், காய்ந்த மிளகாய்,  தட்டி வைத்துள்ள பூண்டு, சீரகம் சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

குறிப்பு:
அதிகக் காரம் இல்லாத இந்த ரசம் எளிதில் ஜீரணமாகும்.


முட்டை ரசம்

தேவையானவை:
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
நாட்டுக்கோழி முட்டை – ஒன்று
பூண்டு – 4 பல்
வேப்பம்பூ – ஒரு டீஸ்பூன் (விரும்பினால்)
சீரகம் – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – அரை  டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – கால் கப்
கறிவேப்பிலை – சிறிது
நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
புளியை ஒரு கப் தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பூண்டு, சீரகம், மிளகு, சிறிது கொத்தமல்லித்தழையை சேர்த்து தட்டிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெந்தயம் மற்றும் தட்டி வைத்துள்ள கலவையைச் சேர்த்து சிறிது நேரம் மட்டும் வதக்கவும். இத்துடன்  புளிக்கரைசல், தேவையான தண்ணீர், வேப்பம்பூ, உப்பு சேர்த்து நுரை கூடி வரும்போது ஒரு முட்டையை உடைத்து மெதுவாக ஊற்றவும். முட்டை வேகும்வரை கொதிக்கவிடவும்.

3 நிமிடங்களில் முட்டை வெந்துவிடும். பிறகு மீதமிருக்கும் கொத்தமல்லியைத்தழை, கறிவேப்பிலையைத் தூவி இறக்கவும். சாதத்துடன் இந்த ரசம், அதனுள் உள்ள முட்டையை சேர்த்துப் பரிமாறவும்.


மருந்துக் குழம்பு

தேவையானவை:
பூண்டு – 10 பல்
சீலா கருவாடு (அ) சீலா மீன் – 5 சின்ன துண்டுகள்
நல்லெண்ணெய் – 5 டீஸ்பூன்
முட்டை – ஒன்று (நாட்டுக்கோழி முட்டை எனில் மிகவும் நல்லது)
தேங்காய் – அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
உப்பு – தேவையான அளவு

மருந்து குழம்புப் பொடி செய்ய:
சுக்கு – 100 கிராம்
மிளகு – 25 கிராம்
திப்பிலி – 10 கிராம்
நறுக்கு மூலம் – 25 கிராம்
ஓமம் – 50 கிராம்
கருஞ்சீரகம் – 25 கிராம்
பெருங்காயம் – ஒரு புளியங்கொட்டை அளவு
கடுகு – 50 கிராம்
சீரகம் – 25 கிராம்

மருந்து குழம்புப் பொடி செய்யும் முறை:

சுக்கை அம்மியில் நன்கு தட்டி, பின்னர் மிக்ஸில் பொடிக்கவும் (சுக்கு மிகவும் கடினமாக இருக்கும், நேரடியாக அரைத்தால் மிக்ஸி பிளேடு உடைந்துவிடும்). மீதமுள்ள பொருட்களையும் லேசாக அம்மியில் தட்டி பின்னர் மிக்ஸியில் சேர்த்துப் பொடியாக அரைத்து, வேண்டுமானால் சலித்துக்கொள்ளவும். இந்த மருந்து குழம்பு பொடியை சுத்தமான காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு, அவ்வப்போது எடுத்து குழம்பு வைத்துக்கொள்ளலாம்.

குழம்பு வைக்கும் முறை:

கருவாட்டை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து நன்கு கழுவவும். அதில் இருக்கும் அதிக உப்பை இது எடுத்துவிடும். தேங்காயுடன் இரண்டு பூண்டு சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். இத்துடன்  2 கப் தண்ணீர், 2 டேபிள்ஸ்பூன் மருந்து குழம்புப் பொடி சேர்த்துக் கரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் மீதமிருக்கும் பூண்டைச் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கரைசலை சேர்க்கவும். குழம்பு ஓரளவு கொதித்தவுடன் கழுவி வைத்துள்ள கருவாட்டைச் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும். (கருவாட்டில் ஏற்கெனவே உப்பு இருக்கும் என்பதால், ருசித்துப் பார்த்து தேவையெனில் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.)

குழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும்போது, முட்டையை குழம்பில் உடைத்து ஊற்றி மூடிவைத்து மிதமான தீயில் வேகவிடவும். முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சுடச்சுட சாதத்துடன் சாப்பிடவும். தொட்டுக்கொள்ள குழம்பில் இருக்கும் கருவாடும், முட்டையும் போதுமானது, சைட் டிஷ் எதுவும் தேவையில்லை.

குறிப்பு:
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற தாய்மார்கள் மீன் மற்றும் கருவாடு உணவுகளை முதல் 20 நாட்களுக்குத் தவிர்க்கச் சொல்வார்கள். மருந்து குழம்பு பொடி, நாட்டுமருந்துக் கடைகளில் ரெடிமேடாகவும் கிடைக்கது. வாங்கி, எளிய முறையில் குழம்பு செய்யலாம். தாய்க்கு கர்ப்பப்பை குணமடையவும், குழந்தைக்கு வயிற்று வலி மற்றும் செரிமானப் பிரச்சனைகள் வராமலும் இருக்க, இந்தக் குழம்பு உதவும்.  வாரம் இரு முறை வைத்துச் சாப்பிட்டால் பால் சுரப்பு சீராகும், தேவையில்லாத கழிவுகள் உடம்பிலிருந்து வெளியேறும். முதல் மாதம் அவசியம் சாப்பிட வேண்டிய குழம்பு இது.


மட்டன் மிளகு ஈரல் வறுவல்

தேவையானவை:
ஈரல் – 250 கிராம்
சின்னவெங்காயம் – 5
பூண்டு – 1 பல்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கடுகு – அரை டீஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 5 டீஸ்பூன்

செய்முறை:
ஈரலை சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாகக் கழுவிக்கொள்ளவும். சீரகம், மிளகு இரண்டையும் மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பட்டை, பூண்டு சேர்த்து தாளித்து, நறுக்கிய சின்னவெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் ஈரலைச் சேர்த்து நன்றாகக் கிளறி விட்டு, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், மிளகு – சீரகப்பொடி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு முக்கால் கப் தண்ணீர் சேர்த்து மூடிப்போட்டு 7 நிமிடங்கள் வேகவிடவும்.

ஈரல் வெந்ததும் தண்ணீர் இருந்தால் வற்ற வைத்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

குறிப்பு:
ஈரலை அதிக நேரம் வேகவிட்டால் ரப்பர் போலாகிவிடும். இரும்புச் சத்து மற்றும் கொழுப்பு நிறைந்த இந்த உணவு, ரத்த விருத்தியாக மிகவும் உதவும்.

பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் உணவில் வெங்காயம் அதிகம் சேர்த்தால் குழந்தைக்கு வாயுத்தொல்லை வரக்கூடும் என்பதால் பத்திய சமையலில் தவிர்க்கலாம்.


கசாயம்

தேவையானவை:
திப்பிலி – 3 துண்டுகள்
கருடக்கொடி – 2 நீள துண்டுகள்
சுக்கு – 2 இஞ்ச் நீள துண்டு
மாவிலிங்க பட்டை  – 2 ரூபாய் நாணயத்தின் அளவுள்ள துண்டு ஒன்று
சன்னாயிரு – அரை டீஸ்பூன்
வெள்ளைப் பூண்டு – 3
ஓமம் – அரை டீஸ்பூன்
கருஞ்சீரகம் – அரை டீஸ்பூன்

செய்முறை:
திப்பிலி, கருடக்கொடி, மாவிலிங்க பட்டை, சன்னாயிரு மற்றும் சுக்கை நன்கு தட்டி வைக்கவும், வெள்ளைப்பூண்டை உரித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையானவற்றில் கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒன்ற்ரை கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். பிறகு, ஆற வைத்து வடிகட்டி பருக கொடுக்கவும். இந்த மருந்திலிருக்கும் குணங்களும் சத்துக்களும் தாய்ப்பால் மூலமாக குழந்தைகளுக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம், வயிற்று உபாதைகளை குறைக்கும் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை தரும். ஜுரம் வர விடாமல் தடுக்கும், ஜலதோஷத்துக்கு ஏற்ற மருந்து. பிள்ளை பெற்றவர்கள் மட்டுமில்லாமல் மற்ற வயதினரும் வாரம் ஒரு முறை செய்து பருகலாம்.


வெந்தய டீ

தேவையானவை:
வெந்தயம் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்

செய்முறை:
வெந்தயத்தை ஒரு பவுலில் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். காலையில் மற்றொரு பாத்திரத்தில் வெந்தயம் மற்றும் ஊறிய தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து சில நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். பிறகு, இறக்கி வடிகட்டி தண்ணீரை குடிக்க வேண்டும். இந்த டீயைத் தொடர்ந்து குடித்து வந்தால் பால் நன்கு சுரக்கும். உடம்புக்கும் குளிர்ச்சியைத் தரும். கசப்பாக இருக்கும் ஆனால் பால் சுரக்க மிக சிறந்த டீ இது. டீத்தூள் இல்லாவிட்டாலும் டீ என்று அழைக்கப்படுகிறது

Post a Comment