சோலையார்பேட்டை மட்டன் சுக்கா வறுவல்,tamil cooking tips

Loading...
Description:

இந்த மட்டன் சுக்கா வேலூர் மாவட்டம் , திருப்பத்தூரில் உள்ள வேலூர் சாலையில் திருப்பத்தூர் கிச்சன் என்ற உணவகத்தில் எனது நண்பன் திரு. செஃப். டில்லிபாபு தில்லோ அவர்களால் சமைத்து எனக்கு நல்கியது.

சுவையில் எனது நாக்கு லயித்து இருந்தது. அதன் சுவையில் நான் மயங்கியே விட்டேன்.

இந்த உணவு திருப்பத்தூர் அருகில் சோலையார்பேட்டை புகை வண்டி நிலையத்தில் வரும் புகை வண்டி ஓட்டுநர் மற்றும் ஊழியர்களுக்கு மட்டும் அந்த ஊரில் இருந்த இஸ்லாமிய நண்பரால் சமைத்து கொடுக்கபட்டதாகவும் பின்னாளில் இந்த சுவையை மற்றவர்களும் கேட்டு தெரிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் எப்படியோ இதன் சுவைக்கு எனது நாக்கு அடிமை ஆகி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

தேவையான பொருட்கள்

முன்னங்கால் வெள்ளாட்டுக்கறி 750 கிராம்
நெஞ்சுக்கறி 250 கிராம்
வரமிளகாய் தூள் 5 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 300 கிராம் ( அம்மிகல்லில் நசுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி
வரமிளகாய் விதைகள் நீக்கியது 12
குரு மிளகு தூள் 4 தேக்கரண்டி
சீரகத்தூள் 3 தேக்கரண்டி
கறிவேப்பில்ல கொஞ்சமாக
உப்புத்தூள் தேவையான அளவு
மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
மரசெக்கு கடலெண்ணய் 6 மேஜைக்கரண்டி
பசு வெண்ணை 2 மேஜைக்கரண்டி

செய்முறை

1. மட்டனை நன்றாக சுத்தமாக கழுவி வைத்து கொள்ள வேண்டும்.

2. அதை பிரஷர் குக்கரில் போட்டு அதனுடன் 1 மேஜைக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது ,மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் தண்ணீர் சேர்த்து நன்றாக 4 விசில் விட்டுகோங்க.

3. கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஆட்டுக்கறி முக்கால் பாகம் தான் வெந்து இருக்க வேண்டும்.

4. அதன் பின்னர் கறியை ஃப்ரை பண்ணுவதற்கு இரும்பு வடச்சட்டி அல்லது மண்சட்டி மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

5. இப்பொழுது வடச்சட்டியில் 3 மேஜைக்கரண்டி மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு அதில் அம்மிகல்லில் நசுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

6. பிறகு அதில் கறிவேப்பில்ல சேர்த்துகோங்க , பிறகு விதைகள் நீக்கிய வரமிளகாயை சேர்த்துகோங்க நன்றாக கருகி விடாமல் வதக்க வேண்டும்.

7. அதில் வேகவைத்துள்ள வெள்ளாட்டு கறியை சேர்த்துகோங்க நன்றாக எண்ணெய்ல வதக்க வேண்டும்.

8. இப்பொழுது அதில் வரமிளகாய் தூள் , கொத்தமல்லி தூள், சீரகத்தூள் மற்றும் குருமிளகு தூள் சேர்த்துகோங்க நன்றாக கிளறவும்.

9. சிறிது சிறிதாக மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க நன்றாக கறியை உடையாமல் பார்த்து கொண்டு நன்றாக முறுகலாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.

10. பிறகு அதில் பசு வெண்ணையை யும் சிறிது சிறிதாக சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக முறுகலாக ஃப்ரை செய்ய வேண்டும்.

Post a Comment