கணவா பிரட்டல்

Loading...
Description:

கணவா மீன் – 500 கிராம்
வெங்காயம் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 2
பூண்டு/உள்ளி – பாதி
இஞ்சி – அரை அங்குலத்துண்டு
கறித்தூள் – 3 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை/தேசிக்காய் – பாதி
கறிவேப்பிலை – 2 கொத்து
உப்பு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். கணவா மீனை சுத்தம் செய்ய அதன் தலைப்பகுதியைப் பிடித்து இழுத்தால், அப்படியே பிரிந்து வரும். அதில் கறுப்பு பை போல் உள்ள பகுதியில் மை போல் இருக்கும். அதை உடையாமல் பிரித்தெடுத்தெடுக்கவும். உடைந்தால் எல்லாம் கறுப்பாகிவிடும். அதே போல் கண்பகுதியையும் மெதுவாகப் பிரித்து விடவும். அதிலும் மை இருக்கும். பின்னர் தலைப்பகுதியை வெட்டினால் ஒரு பல் வரும். அதனையும் எடுத்து
விடவும். உடல் பகுதியில் ஒரு ஓடு இருக்கும். அதனையும் எடுத்து விட்டு தோலை நீக்கி சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.

துண்டுகளாக்கிய கணவாவுடன் ஒரு தேக்கரண்டி கறித்தூள் மற்றும் உப்பு போட்டு தண்ணீர் சேர்க்காமல், பாத்திரத்தை மூடி வைத்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். சூடானதும் கணவாவிலிருந்து தண்ணீர் வரும். அந்த தண்ணீரே கணவா வேக போதுமானது. வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி விட்டு உருவி வைக்கவும்.

ஒரு தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.

வெங்காயம், பச்சைமிளகாய் சற்று வதங்கியதும் நறுக்கின இஞ்சி, பூண்டு போட்டு நன்கு வதக்கி விட்டு, மீதமுள்ள கறித்தூளையும் அதில் போட்டுப் பிரட்டவும்.

அதன் பின்னர் அதனுடன் அவித்து எடுத்து வைத்துள்ள கணவாவை போட்டு நன்கு பிரட்டவும்.

அதில் உள்ள தண்ணீர் வற்றியதும் கரம் மசாலாவும், கறிவேப்பிலையும் போட்டு கிளறி விட்டு இறக்கி வைத்து எலுமிச்சை சாறு பிழிந்து பிரட்டி விடவும்.

சுவைமிக்க கணவாய் பிரட்டல்கறி தயார். இதில் தேங்காய்பால் சேர்த்தும் செய்யலாம்.

Post a Comment