ஆம்பூர் அக்கா கடை மட்டன் பிரட்டல்

Loading...
Description:

வேலூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு சென்று இருந்த போது நமது சமையல் முகநூல் நண்பர் ஒருவர் ஆம்பூர் அருகே வெட்டுவானம் என்ற ஊரை சேர்ந்தவர்.

அவர் நெடுகாலமாக சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தால் அவருக்கு அழைப்பு விடுத்து இருந்தேன் அவர் என்னை அழைத்து கொண்டு ஆம்பூர் அருகே அக்கா கடை என்ற உணவகதிற்கு அழைத்து போய் இருந்தார்.

அங்கு அவர் எனக்கு அந்த கடையை பற்றி கூறினார்கள். இவர் அங்கு ஏற்கனவே மட்டன் வாங்கி கொடுத்து சமைக்க கூறி இருந்தார்.

அந்த கடையின் உரிமையாளரான அக்கா மிகவும் மங்களகரமாக இருந்தார். அந்த அம்பாளை பார்த்த மாதிரி இருந்தது.

மட்டன் ருசி அட அட டா !! என்ன ருசி !!! பிரமாதமான ருசி !!! நச்சென்று காரம், கச்சிதமான உப்பு !!! அட்டகாசமான சுவை !!! கறியும் நன்றாக வெந்து இருந்தது !!! குழம்பின் சுவையும் பிரமாதம் !!! சரியான விகிதத்தில் மசாலா !!! எண்ணெய் அதிகமில்லை !!! மொத்தத்தில் A Class சுவை.

குறைகூற எள்ளளவும் இடமில்லை. சுடுசாதத்துடன் பரிமாறப்பட்டது. சூப்பரோ சூப்பர் அட்டகாசமான கிராமியத்து பாணியில் பிரமாதமான சுவை.

உண்மையில் சொல்ல போனால் கூற வார்த்தைகள் இல்லை ஒரே ஒரு அட்வைஸ் அந்த பக்கம் போக நேர்ந்தால் மிஸ் பண்ண வேண்டாம். விலையும் மிகவும் குறைவு. அளவோ மிகவும் அதிகம். அந்த இடத்தில் மிகவும் பிரபலமான கிராமியத்து அசைவ உணவகம்.

தேவையான பொருட்கள்
மட்டன் 500 கிராம்
ஆட்டுக்கொழுப்பு 100 கிராம்
சின்ன வெங்காயம் 25 ( அம்மிகல்லில் நசுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் 3 ( விழுதாக அம்மிகல்லில் நசுக்கியது)
கறிவேப்பில்ல 2 ககொத்து
தக்காளி 3 ( பொடியாக நறுக்கியது)
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி ( பொடியாக நறுக்கியது)

தாளிக்க
பட்டை 1 இன்ச்
கிராம்பு 4
அண்ணாச்சி மொக்கு 2
சோம்பு 1 தேக்கரண்டி

ஸ்பெசல் மசாலா பொடி
வரமிளகாய் 10
கொத்தமல்லி விதை 4 மேஜைக்கரண்டி
பட்டை 3 இன்ச்
சோம்பு 1 மேஜைக்கரண்டி
குரு மிளகு 1 மேஜைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
ஏலக்காய் 4
அண்ணாச்சி மொக்கு 1

மசாலா அரைக்க
தேங்காய் துருவல் 1 கப்
சோம்பு 1 மேஜைக்கரண்டி
முழு முந்திரி பருப்பு 15

செய்முறை

1. மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக மிக்ஸியில் சேர்த்துகோங்க நன்றாக மையமாக நைசாக விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

2. இப்பொழுது ஒரு இரும்பு வடச்சட்டியில் பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்துகோங்க நன்றாக மணம் வீசும் வரை வறுத்து கொள்ள வேண்டும். பிறகு மிக்ஸியில் போட்டு நன்றாக பொடியாக நைசாக பொடித்து கொள்ள வேண்டும்.

3. இப்பொழுது பிரஷர் குக்கரில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்துகோங்க நன்றாக இரண்டு நிமிடம் வதக்க வேண்டும்.

4. அதில் அம்மிகல்லில் நசுக்கிய சின்ன வெங்காயம் , பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்ல சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.

5. இச்சமயத்துல அதில் மட்டன் கொழுப்பை சேர்த்துகோங்க நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.

6. அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

7. அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்துகோங்க நன்றாக கூழ் போல் மசியும் வரை வதக்க வேண்டும்.

8. அதில் பொடித்து வைத்துள்ள ஸ்பெசல் பொடியை சேர்த்துகோங்க நன்றாக கிளறவும். அதில் நன்றாக கழுவி சுத்தமாக வைத்துள்ள மட்டனை சேர்த்துகோங்க நன்றாக கிளறி அதில் தேவையான அளவிலான தண்ணீர் ஊற்ற வேண்டும். அதில் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க.

9. இப்பொழுது பிரஷர் குக்கரின் மூடியை மூடி 5 விசில் விட்டுகோங்க அதன் பிறகு சிறுதீயிலே 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

10. பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை கொட்டி , சிறிது தண்ணீர் சேர்த்துகோங்க, நன்றாக பிரஷர் குக்கரின் மூடியை மூடி சிறுதீயிலே 20 நிமிடங்கள் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். கவனம் தேவை அடி பிடிக்காமல் பார்த்து கொள்ளவும்.

11. பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

Post a Comment